இயற்கையைத் தேடி!

image of a girl going through a tunnel, post tile on image

அப்படியே பக்கத்துல இருக்கிற பார்க்குக்கு ஒரு வாக் போன இயற்கை வந்துடுது. சரி, கொஞ்சம் சிட்டியை விட்டு வெளில தாண்டினா வயலோ, காடோ, மலையோ இருக்க போது. எல்லா இடத்திலுயும் நிறைஞ்சு இருக்குற இயற்கையை போய் எதுக்கு தேடிகிட்டு?

இந்த தலைப்பை படித்தவுடன் இப்படியும் சில வாசகர்களுக்கு தோன்றியிருக்கலாம். சரி தானே? இன்று இயற்கை என்பது நம்மை விட்டு, நம் உடலை விட்டு, நம் மனதை விட்டு தொலைவில் உள்ள, இடம் மற்றும் பொருள்சார்ந்த ஒன்று என்ற தோற்றத்தில் தானே மனிதன் சென்றுகொண்டிருக்கிறான்.

அப்ப, இயற்கைனா என்னென்னு சொல்ல வரீங்க?

பார்க்கலாம், இப்பதிவில்!

இயற்கையைத் தேடி!

என் முதல் தமிழ் தொடரின் முதல் பதிவு

 

ஒவ்வொருவருடமும் ஏப்ரல் மாதத்தில் ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டு, 26 பதிவுகள் இந்த வலைப்பதிவில் எழுதுவது வழக்கம். அதில் ஒரு எழுதுதல்சார்ந்த வேகம், தலைப்புசார்ந்த விவேகம், வாழ்வியல்சார்ந்த தேடல் போன்ற பல அனுபவங்களைக் கண்டுஇருக்கிறேன்.

இம்முறை, இயற்கையைத் தேடி என்ற தலைப்பில் எழுத தொடங்க எண்ணியபொழுது, இந்த தலைப்பு, இதுவரை கடைபிடித்த வேகத்தை விட்டுவிட்டு விவேகத்தையும், தேடலையும் மட்டும் ஏந்தி எடுத்து செல்ல வேண்டியத் தலைப்பு என்றுணர்ந்தேன். இத்தொடர் தொடர தொடர இதன் அர்த்தத்தை வாசகர்களும் உணர்வீர்கள்.

இவ்வருடம் ஏன் இயற்கையைப் பற்றி?

இன்னும் ஐந்து நாட்களில், கம்பம் அகாடமி ஆப் அக்குபஞ்சர் வழங்கும் ஒருவருட டிப்ளமோ படிப்பை நிறைவு செய்ய உள்ளேன். அக்குபஞ்சர் மருத்துவம் சார்ந்த படிப்பாக தொடங்கிய இவ்வொருவருடகால வகுப்புகள் என்னுள் ஏற்படுத்திய புரிதல்கள், உணருதல்கள், மற்றும் தேடல்கள் வழிவந்த விழிப்புணர்வு தான் இத்தொடர் – இயற்கையைத் தேடி!

இங்கே கோடிடப்படவேண்டியது விழிப்புணர்வு! 

அறிவுபூர்வமான புரிதலோ, உணர்வுபூர்வமான அனுபவங்களோ மட்டும் மாற்றங்களை உருவாக்க முடியாது. இவ்விரண்டின் அடிப்படையில் தோன்றும் விழிப்புணர்வு மட்டுமே நம்மை – ஒரே குட்டைக்குள் மட்டைகளாக விழுந்துகிடப்பவர்களை – தூக்கி எழச்செய்ய முடியும்.

நான் குட்டையில் மட்டைகளோடு மட்டையாய் நின்றுகொண்டிருக்கிறேன் என்பதை கண்ணாடி பிடித்துக்காட்டி, “நீயே பார், எங்கே எப்படி விழிந்துக்கிடக்கிறாய்” என்று என் பிம்பத்தை என்னக்கே காட்டியது இந்த அக்குபஞ்சர் படிப்பு. ஆதலால், இயற்கையை நூறு சதவிகிதம் பின்பற்றி வாழ்பவளாக நான் இந்த தொடரை துவங்கவில்லை. இயற்கையைத் தேடும் என் முயற்சியை பகிர்பவளாக எழுகிறேன்.

தேடிச் சோறுநிதந் தின்று — பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம்
வாடித் துன்பமிக உழன்று — பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து — நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் — பல
வேடிக்கை மனிதரைப் போலே — நான்
வீழ்வே னன்றுநினைத் தாயோ?

பாரதியின் இவ்வரிகளில் வெளிப்படும் தீ,

கடை விரித்தேன் கொள்வாரில்லை, கட்டிவிட்டேன்!

வள்ளல் பெருமானின் இவ்வாசகத்தில் காணப்படும் வருத்தம்,

நம்மை உலுக்கி எழுப்பாமல் இருக்கிறது என்றால் நம் அத்தைகைய போதை வாழ்வில் வீழ்ந்துகிடக்கிறோம் என்று அர்த்தம். இநெருப்புக்கனல் ஊதி எழுப்பப்பட்டுவிட்டால், வெளிவரும் அத்தீப்பொறி மாற்றத்தை உருவாக்காமல் அணைந்து நின்று போக சாத்தியம் இல்லை.

அஃதொரு தீப்பொறியின் உருவம் தான் இந்த தொடர்!

என் அக்குபஞ்சர் பயிற்சி குரு இருவர்,

ஆர். தங்கமணி சார் மற்றும் பி.எம். உமர் பாரூக் சார் 

அவர்களுக்கும் என் நன்றிகளை நினைவுகூற இத்தருணத்தில் கடமை பட்டிருக்கிறேன்.

இத்தொடர் ‘இயற்கை’ என்று எதை குறிப்பிடுகிறது?

ஒரு பந்து உருண்டோடிக்கொண்டிருக்கிறது. அதை தடுத்து நிறுத்தாதவரை, அதனுள் சக்தி இருக்கும் வரை அது உருளும். இது பிரபஞ்ச படைப்பின் இயற்கை. இந்த இயற்கையை நியூட்டன் ஒரு அறிவியல் விதியாக இவுலகிற்கு தந்தார்.

ஒரு வேலை எவ்வாறு தடுத்தாலும் அப்பந்தானது நிற்காமல் உருண்டுகொண்டேபோகிறது என்று வைத்துக்கொள்வோம். என்ன ஆகும்? அதுஅது அங்கங்கே உலகத்தில் தன் நிலை மாறி உருண்டுகொண்டே இருக்கும். அதாவது, இயற்கையை மீறி நிலைகெட்டு செயல்படும் அனைத்தும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர இயலாத ஒரு ஆபத்தைக் குறிக்கிறது, அல்லவா?

இஃதொரு விதி மீறல், நம் உடலில் நிகழ்ந்தால் அது வியாதியை உருவாக்கிறது. நீரழிவு நோய் என்பது ரத்தத்தில் கட்டுக்குலடங்காமல் சுழலும் சர்க்கரையின் அளவு என்கிறார்கள். புற்று நோய் என்பது கட்டுப்படுத்த முடியாமல் வளரும் உயிரணுக்களின் பாதிப்பு என்கிறார்கள்.

விதி மீறல், நம் மனதில் நிகழ்ந்தால், கவலை, சோகம், போன்ற உணர்ச்சிகளாக வெளிப்படுகிறது.

சுற்றி இருக்கும் நம் சமுதாயத்தில் நிகழ்ந்தால், சமுதாய சீர் நிலை கேடு என்கிறோம் அல்லவா?

அப்படியென்றால், நம் உடலாலும், மனதாலும், சமுதாய பங்கேற்பாலும், நாம் இயற்கை விதிகளை மீறுகிறோமா? அப்படி மீறுகிறோம் என்றால், எவ்வழியில் மீறுகிறோம் என்ற புரிதல் நம்மிடம் இருக்கிறதா? ஒரு நோய் உருவாகும் முன்பே நம் உடல் நமக்கு தெரிவிக்கும் அறிகுறிகளை கவனிக்காமல் விட்டுவிடுகிறோமோ? எதை மீறிவிட்டு பின்பு மனம் வருந்துகிறது? சமுதாய இயற்கை என்று ஒன்று இருக்கிறதா? ஒரு தனிமனிதனுக்கு சமுதா இயற்கை விதிகளில் எத்தகைய பங்கேற்பு இருக்கிறது?

இத்தகைய அடிப்படையில் தான் இத்தொடர் துவங்க இருக்கிறது.

தொடர்ந்து பேசலாம், அடுத்த பதிவில்!

இங்கே, இத்தொடரை ஆங்கிலத்தில் படிக்கலாம்.

4 Replies to “இயற்கையைத் தேடி!”

    1. Curing is body’s nature, not disease, but provided we don’t interfere in its curing process. Violation of nature is the root cause of all diseases. We’ll see it all one by one in the series.

    1. நன்றி கார்த்திகேயன் சார்!

Leave a Reply