குழந்தைகளுக்கான ஸ்கிரீன் டைம்: ஒரு விரிவான கண்ணோட்டம் (பாகம் 1)

screen time for children

எங்கள் வீட்டில் தொலைக்காட்சி இல்லை. குழந்தைகளுக்குத் திரை நேரம் (ஸ்கிரீன் டைம் -Screentime) இல்லாத வீடு என்றே சொல்ல வேண்டும். அடேங்கப்பா, பரவாயில்லையே, இப்படி ஒரு வீடா என்று இப்போது உங்களுக்குத் தோன்றும் எண்ணத்திற்கு நான் மார் தட்டிக்கொள்ளும் முன் இதையும் கூறிவிடுகிறேன் – வேலை பளுவின் காரணமாக வேறு வழியில்லாமல் என் மகன் கையில் ஒரு டேபைக் (tab) கொடுத்து உட்கார வைத்த காலமும் இருந்திருக்கிறது. வீடியோ பார்க்காமல் சாப்பிடமாட்டேன் என்று அவன் அடம் பிடித்தக் காலமும் இருந்திருக்கிறது. ஆமாம்! குழந்தை வளர்ப்பில், ஸ்கிரீன் டைம் என்ற ஒரு குட்டைக்குள் தடுக்கி விழுந்து பிரண்டு எழுந்து வந்திருக்கிற ஒரு தாயாக இப்பதிவை எழுதுகிறேன். 

இன்று எங்கள் வீட்டில் குழந்தைகளுக்கு பெரும்பாலும் ஸ்கிரீன் டைம்மே இல்லை. இது கண்டிப்பான கட்டுப்பாட்டினால் உருவாக்கப்பட்ட ஒன்று கிடையாது. மாறாக, இருவரும் அவரவர் விளையாட்டு உலகத்தில் மூழ்கிவிடுவதால் ஸ்கிரீன் டைம்மின் தேவை அவர்களுக்குத் தோன்றுவதில்லை. அப்படியே ஒரு நாள் என் மகன் வீடியோ பார்க்கவேண்டும் என்று கேட்கும் பொழுது, கவலையில்லாமல் என்னால் அதை அனுமதிக்க முடிகிறது. அஃதொரு ஸ்கிரீன் டைம் கலாச்சாரத்தை வீட்டில் கவனமாகக் கட்டி உருவாக்கியதே இதற்குக் காரணம்.

என் அனுபவத்திலிருந்து குழந்தைகளுக்கான ஸ்கிரீன் டைம்மைப் பற்றி இங்கு விரிவாக பகிர்கிறேன். (இப்பதிவை ஆங்கிலத்தில் இங்கே படிக்கலாம்). நீண்ட பதிவாகிவிடும் என்பதனால், மூன்று பாகங்களாகப் பிரித்து எழுதுகிறேன். மூன்று பாகங்களிலும் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை கீழேயுள்ள வழிவளக்கி (guide) விளக்கும்.

பாகம் 1

  • மின்னணுத் திரைகளில் (Electronic screens) குழந்தைகள் என்ன பார்க்கிறார்கள்?
  • எதைப் பார்க்க நாம் அனுமதிக்கலாம்?
  • எவ்வளவு திரை நேரம் குழந்தைகளுக்குச் சரியானது?
  • ஸ்கிரீன் டைமினால் என்னென்ன பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது?
  • பொதுவாக, ஸ்கிரீன் டைம் என்பது ஆபத்தானதா?

பாகம் 2 

  • பெற்றோர்களாக நாம் நம் ஸ்கிரீன் டைம்மைக் குறைப்பது அவசியமா?
  • நாம் நம் முன்னுரிமைகளை (priorities) மாற்றிக் கொள்வது உதவுமா?
  • தாத்தா பாட்டியின் ஸ்கிரீன் டைம் குழந்தைகளைப் பாதிக்காமல் எப்படிப் பாதுகாப்பது?
  • குழந்தைகளை மற்ற செயல்களில் (activities) திசை திருப்புவது உதவுமா?

பாகம் 3 

  • இதுவரை ஸ்கிரீன் டைம்மிற்கு அறிமுகப்படுத்தப்படாத குழந்தைகளின் பெற்றோர்களுக்கானக் குறிப்புகள்.
  • மிதமான ஸ்கிரீன் டைம் உடைய குழந்தைகளின் பெற்றோர்களுக்கானக் குறிப்புகள்.
  • அதிக அளவில் ஸ்கிரீன் டைம் உடைய குழந்தைகளின் பெற்றோர்களுக்கானக் குறிப்புகள்.

 

பாகம் 1

தொலைக்காட்சி (டிவி), கணினி (கம்ப்யூட்டர்), மடிக்கணினி (லேப்டாப்), வரைபட்டிகை (டேப்லெட்), திறன் பேசி (ஸ்மார்ட் போன்) என பல்வேறு திறன் பொருள்களை (gadgets) நாம் இன்று பயன்படுத்துகிறோம். இவற்றுள் எதனின் திரையை நம் கண்கள் கூர்ந்து கவனித்தாலோ அது ‘ஸ்கிரீன் டைம்’ மில் உள்ளடங்கும். குழந்தைகளிடத்தில் பெருகிவரும் திறன் பொருள் உபயோகம் பெற்றோர்களுக்குப் பெரிய சவாலாகவே இருந்து வருகிறது.

குழந்தைகளுக்கு ஸ்கிரீன் டைம் முற்றிலும் கூடாது என்பதில்லை. பெரியவர்களுக்கும் சரி, குழந்தைகளுக்கும் சரி, மின்னணு சாதனங்களால் நன்மையோ  தீமையோ இவ்விரண்டில் எது நிச்சயம் என்பதை நாம் பயன்படுத்தும் முறை தான் தீர்மானிக்கிறது.

மிக முக்கியமானக் குறிப்பு: இரண்டு வயதுக்கு  உட்பட்ட குழந்தைகளுக்குக் கண்டிப்பாக ஸ்கிரீன் டைம்மை முழுமையாகத்  தவிர்க்கவேண்டும். (தொலைத்தூர சொந்தங்களுடன் காணொளியாடலைத் (Video chatting) தவிர). குறிப்பாக, குழவிப் பருவத்தில் (Infancy), ஸ்கிரீன் டைம்மிற்கு உள்ளாகும் குழந்தைகள் சரியானப் பேச்சு வளர்ச்சியை அடைவதில்லை என்று ஆராய்ச்சிககள் கூறுகின்றன. ஆகையால், பின்வரும் குறிப்புகள் 2 – 7 வயது குழந்தைகளுக்கானது.

மின்னணுத் திரைகளில் (Electronic screens) குழந்தைகள் என்ன பார்க்கிறார்கள்?

குழந்தைகள்  திறன் பொருள்களில் என்ன செய்கிறார்கள் என்பது வீட்டிற்கு வீடு மாறுபடும் ஒரு விஷயமாகும். பெரும்பாலும் கீழே குறிப்பிட்டுள்ளவையையே குழந்தைகள் திரை நேரத்தில் செய்கின்றனர்.

  • காலையிலிருந்து இரவுவரை தொடர்ந்து தொலைக்காட்சி ஓடிக் கொண்டே இருக்கும் வீடுகள் பல உள்ளன. அவ்வீடுகளில், செய்தி, நாடகங்கள், கார்ட்டூன்கள், சினிமா என குழந்தைகள் மாறி மாறி பல நிகழ்ச்சிகளைக் காண்கின்றனர்.
  • சில வீடுகளில் வடத் தொலைக்காட்சி இணைப்பு (Cable network) இல்லாமல் துடித் தொலைக்காட்சி (Smart  TV) வசதிகளை மட்டும் பயன்படுத்துவோர் உள்ளன. உதாரணத்திற்கு, பையர்ஸ்டிக் (Firestick), அமேசான் ப்ரைம் (Amazon prime), நெட்பிளிக்ஸ் (Netflix) போன்றவை.
  • சில வீடுகளில் குழந்தைகள் இயங்கலை ஊடகங்களைப் பயன்படுத்த அணுகுக் கட்டுப்பாடு (access control to online media ) கொடுக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு, யூட்டியுப் காணொளிகள் (Online YouTube videos).
  • மற்ற சில வீடுகளில், இனையத்தைப் பயப்படுத்தாமல் முடக்கலை (offline) வழியாக மட்டும் காணொளிகளைக் குழந்தைகள் காண்கின்றனர்.
  • சில வீடுகளில் குழந்தைகள் காணொளி விளையாட்டுகளில் (Video games) ஈடுபடுகின்றனர்.
  • சில வீடுகளில் குழந்தைகள் பாடம் மற்றும் அறிவுத்திறனை வளர்க்கும் வலைத்தளங்களையும், செயலிகளையும் பயன்படுத்துகின்றனர் (Learning and educational websites and apps).

குழந்தைகள் எதைப் பார்க்க நாம் அனுமதிக்கலாம்?

சிறுவர்கள் இதைத் தான் பார்க்கவேண்டும், இதைப் பார்ப்பது தவறு என்று நிலையான ஒப்புமை மேற்கோள் எதுவும் கிடையாது (Fixed frame of reference). இருப்பினும் நம் குழந்தைகள் என்னப்  பார்க்கிறார்கள், என்னப் பார்ப்பது நன்றன்று என நமக்கு நாமே சில வழிகாட்டு நெறிகளை மனதிற்குள் உருவாக்கி வைப்பது நல்லது.

  • சில கார்ட்டூன்கள் பிரபலமாக இருந்தாலும், அதை ஒரு தடவை நீங்களும் பார்த்துக் கண்காணிப்பது நல்லது. உதாரணத்திற்கு, சோட்டா பீம் கார்ட்டூன் நம் நாட்டில் குழந்தைகளிடையே  மிக பிரபலமானது. ஆனால், தனிப்பட்ட முறையில், அதில் வரும் அடிதடி சண்டைக் காட்சிகளைப் பிள்ளைகள் காண்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.
  • மின்னணுத் திரைகளில் குழந்தைகள் காணொளி விளையாட்டுகளை விளையாடுவது, ஒரு பக்கம், மூளைத்திறனை மேம்படுத்த உதவுகிறது. ஆனால் அதே சமயம், அவ்விளையாட்டிற்கு அவர்கள் அடிமையாகக்கூடிய அபாயமும் உண்டு. இரண்டையும் எடைப்போட்டு, உங்கள் பிள்ளைகளுக்கு எது சரியானது என்பதைத் தீர்மானியுங்கள்.
  • வன்முறை போன்ற எதிர்மறை உணர்வுகளைத் (Negative feelings) தூண்டக்கூடிய நாடகங்களையும், சினிமாக்களையும் உங்கள் பிள்ளைகள் காண்பது அவசியமா என்று நீங்கள் ஆலோசிக்க வேண்டும். சில ஆராய்ச்சிகள், ஏழு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் காட்சிகளில் காட்டப்படும் தீவிரமான உணர்ச்சிகளிலுருந்துப் பாதுகாக்கப் பட வேண்டும் என்கின்றன. ஏனென்றால், சிறு பிள்ளைகள் எது நிஜம், எது கற்பனைக் காட்சி என்று வித்தியாசப் படுத்துதலை ஏழு வயது வரையாவது கற்றுக்கொண்டுதான் இருப்பார்கள்.
  • உங்கள் குழந்தைகளுக்கு எதில் நாட்டம் இருக்கிறது என்று கவனித்து, அது சம்பந்தமான ஸ்கிரீன் டைம்மைத் தேர்ந்தெடுங்கள். உதாரணத்திற்கு, என் மகனுக்கு லெகோ (Lego) விளையாடுவதில் அதிக நாட்டம். லெகோ பிளாக்ஸில் எப்படி கட்டிடங்கள் கட்டப்படுகின்றன என்பதைப் பற்றின காணொளிகளை (Ex. தி ஆக்க்ஷேல் ஷோ – The Axel Show) அவனுக்கு சில சமயம் காண்பிப்பேன். சங்கீதம், கால்பந்து போன்ற இதர செயல்களில்  உங்கள் பிள்ளைகளுக்கு ஆர்வம் இருக்கையில், அவர்களின் திரை நேரங்களை சரியான முறையில் பயன்படுத்தலாம்.
  • குழந்தைகளின்  பாடம் மற்றும் அறிவுத்திறனை வளர்க்கும் வலைத்தளங்களும், செயலிகளும் நிறைய இருக்கின்றன (Learning and educational websites and apps). அதில் எவை உங்கள் பிள்ளைக்குப் பொருத்தமானதாக இருக்கும் எனப் பார்த்து அவர்களுக்கு அறிமுகப்படுத்தலாம்.

இது ஒரு முடிவில்லாப் பட்டியலாக நீளக் கூடியது. இந்த விவாகத்தின் நோக்கமானது, உங்கள் பிள்ளைகள் திறன் பொருள்களில் என்ன செய்கிறார்கள், அதில் உங்களுக்கு மகிழ்ச்சி தானா, அதில் எதையாவதை நீங்கள் மாற்ற நினைக்கிறீர்களா  என்பதை எல்லாம் நீங்கள் உங்கள் மனதில் கண்டறிதல் வேண்டும் என்பதே ஆகும்.

எவ்வளவு ஸ்கிரீன் டைம் குழந்தைகளுக்குச் சரியானது?

அமெரிக்கன் அகாடமி ஆப் பீடியாட்ரிக்ஸின் (American Academy of Pediatrics) படி, 2 – 5 வயதுக்கு உட்பட்டக் குழந்தைகளுக்கு ஒரு மணி நேரும் மேல் ஸ்கிரீன் டைம் இருத்தல் நன்றல்ல. உங்கள் வீட்டில் இதைக் கடைப்பிடிக்கிறீர்கள் என்றால், அது மிகச் சிறந்ததாகும். இல்லையெனில், இதைக் குறித்து நீங்கள் கவனம் செலுத்துவது அவசியம்.

ஸ்கிரீன் டைமினால் என்னென்ன பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது?

பல பாதிப்புகளில், மிக முக்கியமானவை:

  • கண் பார்வைப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
  • மற்ற மனிதர்களுடன் சமூகமாக பழகும் திறன் குறைய வாய்ப்புள்ளது.
  • உடல் பருமம் (obesity) அடையும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.

பொதுவாக, ஸ்கிரீன் டைம் என்பது ஆபத்தானதா?

ஆமாம் என்பது தான் பதில் என்று நம்மை நினைக்க வைத்தாலும், மற்ற காரணிகளையும் (factors) நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.

  • உங்கள் குழந்தைகள் நன்றாக விளையாடுகிறார்களா?
  • பிறருடன் சுமுகமாகப் பழுகுகிறார்களா?
  • திரை நேரம் இல்லாமல் சாப்பிடுகிறார்களா?
  • புத்தகம் வாசிக்கும் பழக்கம் அவர்களிடத்தில் இருக்கிறதா?
  • ஸ்கிரீன் டைம்மிற்கு அடிமையாகாதபடி இருக்கிறார்களா?
  • மற்ற பல செயல்களில் ஆர்வம் உள்ளவர்களாக இருக்கிறார்களா?

ஆமாம் என்றால் ஸ்கிரீன் டைம்மைப் பற்றி பெரும் கவலைக் கொள்ளவேண்டாம். குறிப்பிட்ட நேரத்திற்குள், அழுகை அடம் இல்லாமல் தாங்களே திறன் பொருள்களை வைத்து விட்டார்கள் என்றால் அதுவே போதுமானது.

அட, அது தான் எப்படி என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. தொடர்ந்துப் படியுங்கள் பாகம் 2 டில்.

Header Image Courtesy – Photo by bruce mars from Pexels

4 Replies to “குழந்தைகளுக்கான ஸ்கிரீன் டைம்: ஒரு விரிவான கண்ணோட்டம் (பாகம் 1)”

  1. இன்றய காலகட்டத்திற்கு இப் பதிவு மிக மிக முக்கியமானது. அனைவரும் தவறாமல் படியுங்கள். வாழ்த்துக்கள் நந்து.

Leave a Reply